தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதைவிட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.
"கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்" என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.
"தூக்கம், இயலாமை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்" என்பது இதன் பொருளாகும். இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது.
அழுக்கு, அசுத்தம் போன்றவற்றி லிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29)
[2.32] அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.
[2.116] இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
[3.191] அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;).
[4.171] வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
[5.116] இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
[6.100] இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
[7.143] நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
[9.31] அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
[10.10] அதில் அவர்கள்; "(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசத்தமானவன்" என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.
[10.18] தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், "இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; "வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும்.
[10.68] அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன் (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
[12.108] (நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."
[16.1] அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.
[16.57] மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
[17.1] (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
[17.43] அவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
[17.93] "அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்" என்று கூறுகின்றனர். "என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?" என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
[17.108] அன்றியும், "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
[19.35] அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
[21.22] (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
[21.26] அவர்கள்; "அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்" என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
[21.87] இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" என்று பிரார்த்தித்தார்.
[23.91] அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
[24.16] இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, "இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
[25.18] (அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர்.
[27.8] அவர் அதனிடம் வந்த போது "நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார்.
[28.68] மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
[30.40] அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.
[34.41] (இதற்கு மலக்குகள்;) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எஙகள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள்.
[36.36] பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
[36.83] ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
[37.159] எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
[37.180] அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
[39.4] அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
[39.67] அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
[43.13] அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக் அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து "இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்" என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
[43.82] வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள்
வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்.
[52.43] அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
[59.23] அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
[68.29] "எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர்.
This content was taken from Tamil Quran Android App.
No comments:
Post a Comment