திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் "ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன.
[2.35] மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.
[7.19] (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
[7.22] இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.
[7.27] ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
[20.121] பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
"சொர்க்கம்" என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் "ஜன்னத்" என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
* மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் "ஜன்னத்" எனக் கூறப்படுகிறது.
* இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் "ஜன்னத்" எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதம் நபி சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
ஆதம் நபி பூமியில் படைக்கப்பட்டதாகத் திருக்குர்ஆன் (2:30) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர்.
[2.30] (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந் நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
This content was taken from Tamil Quran Android App.
No comments:
Post a Comment