"இந்த மரத்தை நெருங்காதீர்கள்" என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
[2.35] மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.
[7.19] (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
[7.20] எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.
[7.22] இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.
[20.120] ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.
ஆனால் திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென்பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம் (அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதும் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் செய்தவர்களாவர்.
This content was taken from Tamil Quran Android App.
No comments:
Post a Comment