அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் "ஆகு" எனக் கூறினால் உடனே ஆகி விடும்.
ஆனால் "அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்', "அல்லாஹ் கேலி செய்கிறான்', "அல்லாஹ் ஏமாற்றுகிறான்' என்பன போன்ற வாக்கியங்கள் திருக்குர்ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஏமாற்றுதல், கேலி செய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். "ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி ஏதும் செய்யத் தேவை இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால் பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளில் பயன்படுத்துவதைக் காணலாம்.
உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்" என்று நாம் கூறும் போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் தான் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது.
"அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்" என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்" என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்" என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்" என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நீ செய்தால் நான் செய்வேன்" என்ற தோரணையில் அமைந்த இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும். கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்" "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்" என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நன்றி செலுத்தவும் தேவையில்லை. எனவே அதற்கான பலனைத் தருவான் என்றே இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்' என்றால் "தண்டிக்கிறான்' என்று புரிந்து கொள்ள வேண்டும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:15, 2:88, 2:89, 2:152, 2:158, 2:159, 2:161, 3:87, 4:46, 4:47, 4:52, 4:93, 4:118, 4:147, 5:13, 5:60, 7:44, 9:68, 9:79, 11:18, 24:7, 33:57, 33:64, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22)
[2.15] அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
[2.88] இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
[2.89] அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
[2.152] ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
[2.158] நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
[2.159] நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
[2.161] யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
[3.87] நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
[4.46] யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் "நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;" (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
[4.47] வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
[4.52] இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்;. எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
[4.93] எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
[4.118] அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்" என்றும்,
[4.147] நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
[5.13] அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
[5.60] "அல்;லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
[7.44] சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, "எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக் கொண்டோம்" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.
[9.68] நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு.
[9.79] இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
[11.18] அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
[24.7] ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்).
[33.57] எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
[33.64] நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
[38.78] "இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்" (எனவும் இறைவன் கூறினான்).
[47.23] இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
[48.6] அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
[64.17] நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான், அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன், சகிப்பவன்.
[76.22] "நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று" (என்று அவர்களிடம் கூறப்படும்).
This content was taken from Tamil Quran Android App.
No comments:
Post a Comment