அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Wednesday, 15 October 2014

ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?



இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.


[2.37] பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.


[7.23] அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

அதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திலிருந்து அறியலாம்.

தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக ஒரு கட்டுக் கதையைக் கூறி வருகின்றனர். அந்தக் கட்டுக்கதை இது தான்:

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ" என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்றும் எழுதப்பட்டிருந்ததாம். "இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?" என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது வழித் தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்" என்று இறைவன் கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததாம். "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக" என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப் படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாக இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.

எனவே இந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.



This content was taken from Tamil Quran Android App.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.