எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்.
எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறைவேதம் எனக் கொண்டு வந்தாரோ அது அவர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.
எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது தான் கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இது போல் தயாரித்துக் காட்டுங்கள்!" என்று திருக்குர்ஆன் அறைகூவல் விட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34)
[2.23] இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.
[10.38] இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று.
[11.13] அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
[17.88] "இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது" என்று (நபியே) நீர் கூறும்.
[28.49] ஆகவே, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப்பின்பற்றுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
[52.34] ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
This content was taken from Tamil Quran Android App.