அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Tuesday 30 September 2014

பல திருமணம் : இஸ்லாம் அனுமதிப்பது ஏன்??

பலதார மணம்

இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும்.

முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கருதப்படுகிறது.

முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான்.

இன்னொரு பெண்ணை இரண்டாவதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்படமாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்.

இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது.

இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.

பெண்ணுரிமை பாதிக்கிறது என்பதுதான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால்தான் "சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கிவிட்டு குடும்பம் நடத்து" என்று இஸ்லாம் கூறுகிறது.

திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் மலேசிய இந்து சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.

1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.

3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.

4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.

5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.

7. வரதட்சணை கொடுக்க இயலாதவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.

8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.

10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

இது போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதைத் தடுப்பதற்காகவும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.

இதனால் பல பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது தான் யதார்த்த நிலை.

ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் ஏராளமான பெண்களுடன் தகாத உறவு வைத்துச் சீரழியும் நிலைமை தான் உருவாகும்.

மேலும் இது போன்ற தகாத உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலதாரமணம் செய்யுமாறு இஸ்லாம் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. தேவையுள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது.

இரண்டாம் தாரமாகவாவது ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராளமான பெண்கள் இருப்பது பலதாரமணத்தின் நியாயத்தை உணர வைக்கிறது.

ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும்.

மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதாரமணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.

மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?

ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோவியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?

ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்?

அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதியைச் சில முஸ்லிம்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இரண்டாம் திருமணம் செய்யக் கூடியவர்கள், முதல் மனைவிக்கு அதைத் தெரிவிக்காமல் இரகசியமாகத் திருமணம் செய்கின்றனர். முதல் மனைவிக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் கருதுகின்றனர்.

உண்மையில் முதல் மனைவியின் உரிமை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக உள்ளது.

ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும் போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறிபோகிறது.

இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.

"முழு நாட்களையும் எனக்கே தருவீர்கள் என்பதற்காகத் தான் உங்களை நான் மணந்து கொண்டேன்; அதில் பாதி நாட்கள் எனக்குக் கிடைக்காது என்றால், அத்தகைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை" என்று கூட அவள் நினைக்கலாம்.

இரண்டாம் திருமணத்தைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்படும் போது தான் மேற்கண்ட உரிமையை அவள் பெற முடியும்.

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாம் மனைவியும் பாதிக்கப்படுகிறாள். ஏனெனில் முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்பவர்கள், அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சரிசமமாக இரண்டு மனைவிகளிடமும் நாட்களைக் கழிக்காமல் அவ்வப்போது ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு இரண்டாம் மனைவியிடம் செல்கின்றனர்.

இதனால் இரண்டாம் மனைவிக்கு, அவளுக்குச் சேர வேண்டிய உரிமையை அவனால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவன் மரணித்து விட்டால் அப்போதும் அவனது மனைவியர் பாதிக்கப்படுகின்றனர்.

கணவனின் சொத்துக்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது என்று முதல் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மரணித்தவுடன் இரண்டாம் மனைவியும் அவளது பிள்ளைகளும் சொத்தில் பங்கு கேட்டு வந்தால் அதனாலும் முதல் மனைவியும் அவளது பிள்ளைகளும் ஏமாற்றப்படுகிறார்கள்.

இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. "இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன்" என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.

தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண் வலியுறுத்தினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.

அலீ (ரலி) அவர்களுக்குத் தமது புதல்வியை மணம் முடித்துக் கொடுக்க ஹிஷாம் பின் முகீரா என்பவர் அனுமதி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் அலீ, எனது மகளை விவாகரத்துச் செய்து விட்டு, அவரது மகளை மணந்து கொள்ளட்டும்" எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5230)

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.