அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Monday 29 September 2014

இயேசு கடவுளின் குமாரரா ?

இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116, 9:31, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்ல; கடவுளின் தூதர்தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை. இயேசு தன்னைக் கடவுள் என்று ஒரு போதும் கூறியதில்லை. தன்னைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அவர் போதனை செய்தார். இயேசுவுக்குப் பின்னால் வந்தவர்கள் தான் கடவுளின் குமாரன் என்ற கொள்கையை உருவாக்கி இயேசுவின் கொள்கைக்கு எதிராக நடந்து விட்டனர் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாகும்.


இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் வசனங்கள் பைபிளில் இன்றளவும் எஞ்சியிருக்கின்றன.

ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
-யாத்திராகமம் 20:3

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.
-உபாகமம் 4:35

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.
-உபாகமம் 6:4-6

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை (என்று கர்த்தர் கூறினார்.)
-ஏசாயா 46:9

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
-யோவான் 17:3,4

போதகரே! நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.
-மத்தேயு 22:36-38

அவர் அவளை நோக்கி "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அதற்கு அவள் "உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும்" என்றாள்.
-மத்தேயு 20:21

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன்" என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி "என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிறதோ அவர்களுக்கே யல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல" என்றார்.

-மத்தேயு 20:23

இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளார்.

பார்க்க : மத்தேயு 8:20, 9:6, 9:8, 16:13, 17:22, 17:12, 17:9, 19:28, 20:18, 20:28, 24:27, 26:24, 26:45

இயேசு கடவுளின் மகன் அல்ல. மனிதனின் மகன் தான் என்று மேற்கண்ட பைபிள் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

கர்த்தரின் குமாரன் என்று இயேசு சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் பொருள் கடவுளின் கட்டளைப்படி நடப்பவர் என்பது தான். கடவுளுக்குப் பிறந்தவர் என்பதல்ல. ஏனெனில் இயேசு மட்டுமின்றி இன்னும் பலர் கடவுளின் குமாரர்கள் என்று பைபிளில் குறிப்பி டப்பட்டுள்ளனர். அந்த இடங்களை இப்படித்தான் கிறித்தவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இஸ்ரவேல் கடவுள் குமாரன் என்று யாத்திராகமம் 4:22,23 வசனங்களும் எரெமியா 31:9 வசனமும் கூறுகின்றன.

தாவீது இறைமகன் என்று சங்கீதம் 2:7 வசனமும், முதலாம் நாளாகமம் 17:13 வசனமும் கூறுகின்றன.

சாலமோன் இறைவனின் குமாரன் என்று முதலாம் நாளாகமம் 22:10 வசனம் கூறுகிறது.

எப்ராயீம் இறைவனின் குமாரன் என்று எரேமியா 31:9 வசனமும், சாமுவேல் இறைமகன் என்று இரண்டாம் சாமுவேல் 7:14 வசனமும் கூறுகின்றன.

எல்லா மனிதர்களுமே கடவுளின் குமாரர்கள் என்றும் பைபிளில் கூறப்படுகின்றனர்.

பார்க்க : உபாகமம் 14:1, சங்கீதம் 68:5, மத்தேயு 6:14,15, மத்தேயு 5:9, மத்தேயு 5:45, மத்தேயு 7:11, மத்தேயு 23:9, யோவான் 1:12, லூக்கா 6:35

எனவே இயேசு கடவுளுக்கு மகன் என்பது பைபிளின் போதனைக்கே எதிரானதாகும்.

"இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்" என்ற வாதமும் பைபிளுக்கு எதிரானது.

தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் - மனிதர் தாம் - என்பதை நன்கு விளக்குகிறது. தந்தையின்றிப் பிறந்தார்" என்ற கூற்றில் தந்தையின்றி" என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவரும். "தாயின்றிப் பிறக்கவில்லை" என்ற கருத்தையே தந்தையின்றி" என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.

மேலும் தந்தையில்லாதவர்கள் ஏசு மட்டுமின்றி இன்னும் பலர் இருந்துள்ளதாகவும் பைபிள் கூறுகிறது.

ஆதாம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டதாக லூக்கா 3:38 வசனம் கூறுகிறது.

யோவாளும் அவ்வாறே தாயும் தந்தையும் இன்றி படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 2:21,22 கூறுகிறது.

மெல்கிசேதேக்கு என்பவர் தாயும் தந்தையுமில்லாமல் பிறந்தார் என்று எபிரேயர் 7:3 வசனம் கூறுகிறது.

அதுபோல் இயேசு சில அற்புதங் கள் செய்ததால் அவர் கடவுளின் குமாரராக மாட்டார். எனெனில் இன்னும் பலர் இவரைவிடப் பெரிய அற்புதங்கள் செய்துள்ளதாக பைபிளில் காணலாம்.

இறந்தவரை எலியா உயிர்ப்பித்ததாக முதலாம் ராஜாக்கள் 17:22, எலிஷா உயிர்ப்பித்ததாக இரண்டாம் ராஜாக்கள் 4:34, 13:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இன்னும் பலர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாக முதலாம் ராஜாக்கள் 17:13-16, 17:6, இரண்டாம் ராஜாக்கள் 4:42-44, 4:2-6, 5:10, 5:14, 6:17, 6:20, 6:6, யாத்திராகமம் 14:22 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுடைய பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை பைபிளை வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ள முடியும்.

அற்புதங்கள் செய்வது கடவுளின் மகன் என்பதற்கான ஆதாரமாகாது என்றும் இயேசுவே சொல்லி இருக்கிறார்.

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?" என்பார்கள். அப்பொழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7:22,23

ஏனெனில் கள்ளக்கிறிஸ்துகளும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.

மத்தேயு 24:24

(இயேசு கடவுளின் குமாரன் அல்ல எனக் கூறும் திருக்குர்ஆன் வசனங்கள் : 3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116, 9:31, 43:59, 43:64)





3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து தக்க சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது" (என்றார்)

3:59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு" என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

4:171. வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

4:172. மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

5:17. "மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்" என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?" என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். 

5:72. "மர்யமின் மகன் மஸீஹ் (இயேசு) தான் அல்லாஹ்" எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்!. "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை" என்றே மஸீஹ் கூறினார்.

5:75. மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! 

5:116. "மர்யமின் மகன் ஈஸாவே! "அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!" என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?" என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்" என்று அவர் பதிலளிப்பார்.

9:31. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்

43:59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லைஇஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

43:61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி" (எனக் கூறுவீராக.)
 
43:62. ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

43:63. ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!" எனக் கூறினார். 

43:64. "அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான்.
எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி" (என்றும் கூறினார்).

Related Tags:-

திருக்குர்ஆன் இறைவேதமே

அர்த்தமுள்ள இஸ்லாம்

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம்

முதலில் தோன்றிய மதம் எது?

 

 

 

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.