அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Wednesday 15 October 2014

முன்னர் அருளப்பட்டது


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.

நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது என எண்ணக் கூடாது. ஒவ்வொரு தூதருக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.


முஸ்லிம்களில் சிலர் "தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன" எனக் கருதுகின்றனர். இது தவறாகும்.

எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 2:213, 14:4, 19:12, 57:25, 87:18,19)


[2.213] (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.

[14.4] ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

[19.12] (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.

[57.25] நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.

[87.18] நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-

[87.19] இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.


ஆயினும் அவற்றின் பெயர்கள் நமக்குக் கூறப்படவில்லை. தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

பெரிய அளவில் வழங்கப்படும் கிதாப் (பெரிய ஏடு) என்றும், சிறிய அளவில் வழங்கப்படும் ஸுஹுஃப் (சிற்றேடு) என்றும் வேதங்களை இரு வகைகளாகச் சிலர் பிரித்துள்ளனர்.

குர்ஆன், தவ்ராத், இஞ்ஜீல், ஸபூர் ஆகிய நான்கும் முறையே நபிகள் நாயகம் (ஸல்), மூஸா நபி, ஈஸா நபி, தாவூத் நபி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இவை மட்டுமே கிதாப் எனும் பெரிய ஏடுகள். மற்ற இறைத் தூதர்களுக்கு ஸுஹுஃப் எனும் சிறிய ஏடுகள் வழங்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்.

இதற்குத் திருக்குர்ஆனிலோ, ஏற்கத் தக்க நபி மொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.

திருக்குர்ஆன் 98:2 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள்" என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், பல வசனங்களில் கிதாப் என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் ஸுஹுஃபு என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கிதாப் என்பதும், ஸுஹுஃபு என்பதும் ஒரே கருத்தைக் கொண்டவை என்பது தெளிவாகின்றது.

வேதம் என்ற அடிப்படையில் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருபவை தான் என்றாலும், தொகுக்கப்படும் விதத்தைப் பொறுத்து இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.

நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது. அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே தான் தொகுக்கப்படுவதற்கு முன்பே திருக்குர்ஆனைக் கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. "முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது; அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை" என எண்ணாமல் "எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன" என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் "அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன" எனவும் பல இடங்களில் கூறுகிறது.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41)


[2.75] (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.

[2.79] ற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

[3.78] நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.

[4.46] யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் "நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;" (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.

[5.13] அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

[5.41] தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.

திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும்.


This content was taken from Tamil Quran Android App.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.