அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Wednesday 15 October 2014

சொர்க்கத்தில் துணைகள்


"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்" என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண்துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.

இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.



படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக "அவர்கள்" எனக் கூறுகிறோம்.

அரபு மொழியில் படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் "நீ" "நீங்கள்" என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.

ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.

"ஸல்லூ" என்று அரபு மொழியில் கூறினால் "தொழுங்கள்" என்று பொதுவாகப் பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.

பெண்களை நோக்கி "தொழுங்கள்" என்று கூறுவதாக இருந்தால் "ஸல்லீன" எனக் கூற வேண்டும்.

அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்" என்று இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும் பெண் களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்

இரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.

அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, "ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன" என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். "ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?" என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

[33.35] நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.


இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.


[3.195] ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

[4.124] ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

[16.97] ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

[40.40] "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்



இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையில் பரிசு வழங்கும் போது "அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)

[5.119] அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

[9.100] இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

[22.59] நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்; நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.

[58.22] அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.

[88.9] தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

[98.8] அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.



எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.

இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை. இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை.

கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.

"இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு" என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417).

ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.

இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அது பெண் பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33)

[2.25] (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.

[3.15] (நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

[4.57] (அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.

[36.56] அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.

[37.48] இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

[38.52] அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

[44.54] இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

[52.20] அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

[55.56] அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

[55.70] அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

[56.22] (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.

[56.35] நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,

[78.33] ஒரே வயதுள்ள கன்னிகளும்.








This content was taken from Tamil Quran Android App.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.