அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Wednesday 15 October 2014

மனிதருக்கு ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாமா?



முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

[2.34] பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.


[7.11] நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

[15.29] அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!

[15.30] அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.

[15.31] இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.

[17.61] இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான்.

[18.50] அன்றியும், "ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

[20.116] "நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.

[38.72] "நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்" (எனக் கூறியதும்);

இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்துத் தெளிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

முதலில் ஸஜ்தா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்ப்போம்.

(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

தொழுகையைக் குறிப்பிட "ஸலாத்" என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.

குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு "ஸலாத்" என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

"ஸவ்ம்" என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப்படுத்திக் கொள்ளுதல்" என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர்சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது.

இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.

நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது "ஸஜ்தா" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. "நன்றாகப் பணியுதல்" என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் "ஸஜ்தா" எனக் குறிப்பிடப்பட்டன.

அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் "நன்றாகப் பணியுதல்" என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்! (திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161)

இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் "ஸஜ்தா" என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள "ஸஜ்தா"வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.

மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும். மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும்.

இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள் செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.

மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.

திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம்.

வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.

வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் "ஜிப்ரீல்" என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார்.

வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. (பார்க்க திருக்குர்ஆன் 35:1)

எனவே, வானவர்களை நம்மைப் போல் கருத முடியாது. எவ்வாறு அவர்களால் பணிவை வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.

நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.

"பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்" என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (திருக்குர்ஆன் 41:37)

படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.

முஆத் (ரலி), ஸல்மான் (ரலி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர்.

(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)

இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல் படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.


This content was taken from Tamil Quran Android App.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.